ADDED : டிச 04, 2024 01:32 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அலுமேலுமங்காபுரம் ஊராட்சிக்குட்பட்டது சவுட்டு காலனி. இங்கு, 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்வதற்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.
இந்த காலனி பகுதிக்கு செல்வதற்கு மண் சாலை, 7 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால், தார்ச்சாலை அமைக்காமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால் மழைக்காலத்தில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மழையால் மண் சாலை சகதியாக மாறியுள்ளதால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் நடந்து செல்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர், தார்ச்சாலை அமைப்பதற்கு நிதியுதவி வழங்கி, விரைந்து சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.