/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பல்லாங்குழியான சாலைகள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
பல்லாங்குழியான சாலைகள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : அக் 09, 2024 11:44 PM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு, தெருச்சாலைகள் சீரமைக்கப்பட்டன.
தற்போது இந்த தெருச்சாலைகள் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும், சரளைகற்கள் பெயர்ந்தும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
பல்லாங்குழிகளாக மாறிய சாலைகளில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். வேண்பாக்கம், ஆலாடு, வெள்ளக்குளம், சிவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்யாவசிய தேவைகளுக்கு பொன்னேரி பஜார் பகுதிக்கு சென்றுவர பாலாஜி நகர் பிரதான சாலையை பயன்படுத்துகின்றனர்.
திருவாயற்பாடி, சின்னகாவணம், பாலாஜிநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் பொன்னேரி ரயில் நிலையம் செல்வதற்கும் மேற்கண்ட பிரதான சாலை பயன்படுத்துகின்றனர். இந்த சாலை சேதம் அடைந்து கிடப்பதால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பாலாஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் தெருச்சாலைகளை கூடுதல் தரத்துடன் அமைத்திருக்க வேண்டும்.
வழக்கமான நடைமுறையை பின்பற்றி சாலை சீரமைத்ததால், தற்போது சேதம் அடைந்து உள்ளன. இரவு நேரங்களில் தடுமாற்றத்துடன் பயணிக்கிறோம். கார், பள்ளி வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. சாலை பள்ளங்களை தவிர்க்க வலது, இடது என வாகனங்கள் மாறி மாறி பயணிப்பதால், எதிரில் வரும் வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன. அவை, விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையாக சேதம் அடைந்த தெருச்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.