ADDED : பிப் 01, 2026 07:01 AM

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் கவரைப்பேட்டையில், 'தமிழக மகளிர் உரிமை மீட்பு பயண' நிகழ்ச்சி நடந்தது. வடக்கு மாவட்ட செயலர் பிரகாஷ் தலைமை வகித்தார். பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசினார்.
அவர் பேசியதாவது:
பொங்கல் தொடர் விடுமுறையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 78 கோடி ரூபாய்க்கு, தமிழக அரசு மது விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், பொங்கலுக்கு கொடுத்த, 3,000 ரூபாய் பரிசு தொகை, மறுபடியும் டாஸ்மாக்குக்கே போய்விட்டது.
கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பேருந்து வசதி இருக்கிறதோ இல்லையோ மதுக்கடைகள் மட்டும் இயங்கி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், கஞ்சா புழக்கம் அதிகரித்து, கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை, திருத்தணி ரயில் நிலையத்தில் கஞ்சா போதை இளைஞர்களின் கொடூர செயல் என குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தை விட்டு குடியையும், கஞ்சாவும் ஒழிப்பேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அன்புமணியுடன் நீங்கள் இருக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். நல்ல தலைவர்களை தேர்தெடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
விவசாயிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவர் அன்புமணியுடன் கைகோர்த்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
