/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்நிலை மேலாண்மையில் தன்னிறைவு: பாலாபுரம் ஊராட்சிக்கு தேசிய விருது
/
நீர்நிலை மேலாண்மையில் தன்னிறைவு: பாலாபுரம் ஊராட்சிக்கு தேசிய விருது
நீர்நிலை மேலாண்மையில் தன்னிறைவு: பாலாபுரம் ஊராட்சிக்கு தேசிய விருது
நீர்நிலை மேலாண்மையில் தன்னிறைவு: பாலாபுரம் ஊராட்சிக்கு தேசிய விருது
ADDED : நவ 14, 2025 10:35 PM

திருவள்ளூர்: நீர்நிலையில் தன்னிறைவு பெற்ற பாலாபுரம் ஊராட்சி, தேசிய அளவில் மூன்றாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது பாலாபுரம் ஊராட்சி. வறண்ட பகுதியான இங்கு, நிலத்தடி நீர் தட்டுப்பாட்டால் குடிநீர், விவசாய பணிகளுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தது.
இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறை மற்றும் கிராம ஊராட்சி சார்பில், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஊராட்சியில், ஏரி, குளம், குட்டை என, 60 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டன.
அவற்றில், 20 தடுப்பணை, ஒன்பது மழைநீர் சேகரிப்பு, கிணறு துார் வாருதல், 18 பண்ணை குட்டை, தலா ஆறு ஊரணி மற்றும் பாரம்பரிய குளங்கள் துார்வாரப்பட்டன. மேலும், வீடு மற்றும் பொது கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக, இந்த ஊராட்சியில் நிலத்தடி நீர் மட்டம், 30 - -40 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அருகில் உள்ள வன பகுதியிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அடர்த்தியாக வளர்க்கப்பட்டு, பசுமையாக காட்சியளிக்கின்றன.
இதையடுத்து, பாலாபுரம் ஊராட்சி, கிராம பஞ்சாயத்து, சமூக அடிப்படையிலான நீர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு மற்றும் நிலையான வள மேலாண்மை ஆகியவற்றில் தன்னிறைவு பெற்றதற்காக, 2024ம் ஆண்டிற்கான, ஆறாவது தேசிய விருதை பெற்றுள்ளது.
தேசிய அளவில் மூன்றாம் பரிசும் வழங்கப்பட உள்ளது. வரும் 18ம் தேதி, டில்லியில் நடைபெற உள்ள விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதை வழங்க உள்ளார்.

