/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய நெடுஞ்சாலை பணியில் தரமில்லை திறப்பதற்கு முன்னரே 'பேட்ச் ஒர்க்' பணி
/
தேசிய நெடுஞ்சாலை பணியில் தரமில்லை திறப்பதற்கு முன்னரே 'பேட்ச் ஒர்க்' பணி
தேசிய நெடுஞ்சாலை பணியில் தரமில்லை திறப்பதற்கு முன்னரே 'பேட்ச் ஒர்க்' பணி
தேசிய நெடுஞ்சாலை பணியில் தரமில்லை திறப்பதற்கு முன்னரே 'பேட்ச் ஒர்க்' பணி
ADDED : மே 28, 2025 11:40 PM

திருவள்ளூர், திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் வரை அமைக்கப்பட்டு வரும் சாலை நீட்டிப்பு பணியில் தரமில்லாததால், பயன்பாட்டிற்கு வரும் முன்னரே, 'பேட்ச் ஒர்க்' பணி நடந்து வரும் அவலம் நிலவுகிறது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடியில் இருந்து ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி, 2011ம் ஆண்டு துவங்கியது. அப்போது, சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரையும் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்துார் வரை, இருவழி சாலையாக மட்டும் மாற்றப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்க பின், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து பெரும்பாக்கம் வழியாக, திருநின்றவூர் வரை 17.5 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி, 364 கோடி ரூபாய் மதிப்பில், 2023ம் ஆண்டு முதல் துவக்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் வகையில், வேகமாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து ஈக்காடு சாலை வரை, 3 கி.மீ., வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
செங்குன்றம் சாலையில் இருந்து திருவள்ளூர் வரை, சவுடு மண் எடுக்க வரும் கனரக வாகனங்கள், அந்த வழியாக வந்து செல்கின்றன. இதன் காரணமாக, தார்ச்சாலையில் ஆங்காங்கே தார், ஜல்லிக் கற்கள் பெயர்ந்து விட்டன.
குறிப்பாக, ஐ.சி.எம்.ஆர்., அருகில் தனியார் பள்ளி எதிரில், 30 அடி வரை தார்ச்சாலை பெயர்ந்து விட்டது. மேலும், சில இடத்தில் சாலை பணிக்கு வரும் வாகனங்கள் பயணிப்பதால், சாலை உள்வாங்கி சேதமடைந்து விட்டது.
இந்த இடத்தை தற்காலிக சீரமைப்பு அடிப்படையில், ஒப்பந்ததாரர்கள் 'பேட்ச் ஒர்க்' நடத்தி, சீரமைத்து வருகின்றனர். சாலை பணி நிறைவடையும் முன்பே, 'பேட்ச் ஒர்க்' நடந்து வருவதால், தரமில்லாமல் சாலை அமைக்கப்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, சென்னை - திருப்பதியை இணைக்கும் பிரதான தேசிய நெடுஞ்சாலை பணியை தரமாக அமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.