/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாலை நேர கால்நடை மருந்தகம் திறப்பதில்...அலட்சியம்!: சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
/
மாலை நேர கால்நடை மருந்தகம் திறப்பதில்...அலட்சியம்!: சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
மாலை நேர கால்நடை மருந்தகம் திறப்பதில்...அலட்சியம்!: சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
மாலை நேர கால்நடை மருந்தகம் திறப்பதில்...அலட்சியம்!: சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : மே 09, 2024 01:12 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கால்நடை மருந்தகங்கள், காலை நேரத்தில் மட்டுமே திறந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் பெரும்பாலான மருத்துவர்கள் மருந்தகத்திற்கு வந்து, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்படுவதால், சில கால்நடைகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் அம்பத்துார் ஆகிய இடங்களில் கால்நடை துறையின் உதவி இயக்குனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், 2019ம் ஆண்டு, 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து, 47 ஆயிரத்து, 474 கறவை பசுகள் மற்றும் மாடுகள், 51 ஆயிரத்து, 239 எருமைகள் என, மொத்தம் 2 லட்சத்து, 98 ஆயிரத்து, 713 மாடுகள் உள்ளன.
நோய் தடுப்பூசிகள்
மேலும், 63 ஆயிரத்து, 236 செம்மறி ஆடுகள், 2 லட்சத்து, 43 ஆயிரத்து, 313 வெள்ளாடுகள் என, மொத்தம் 3 லட்சத்து, 6 ஆயிரத்து, 549 ஆடுகள், 118 குதிரை மற்றும் பூனைகள், 1,973 பன்றிகள், 30 கழுதைகள், நான்கு ஒட்டகங்கள் உட்பட மொத்தம், 3 லட்சத்து, 8 ஆயிரத்து, 674 கால்நடைகள் உள்ளன.
இந்த கால்நடைகளுக்காக ஐந்து கால்நடை மருத்துவமனை, 88 கால்நடை மருந்தகம், 26 கிளை நிலையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், ஆண்டுக்கு இருமுறை கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும், வார விடுமுறையான ஞாயிறு மட்டும், காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் மாலை நேரத்தில் திறப்பதில்லை. இன்னும் சில மருந்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் காலையிலும் திறக்காமல் பூட்டி வைக்கின்றனர்.
தனியார் மருத்துவர்கள்
இதனால், விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல், தனியார் மருத்துவர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான், திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உதவி மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.
இருப்பினும் தற்போதுகூட, மாலை நேரத்தில் கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் திறக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால், கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கால்நடை விவசாயிகள் கூறியதாவது:
கறவை மாடுகள், எருதுகள், ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறோம். அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை, மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்களுக்கு கால்நடைகள் மற்றும் ஆடுகளை சிகிச்சை அளிப்பதற்கு அழைத்துச் செல்கிறோம்.
காலை நேரத்தில் மட்டும் உதவி மருத்துவர் அல்லது ஆய்வாளர் அல்லது கால்நடை உதவியாளர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக, மாலை நேரத்தில் கால்நடை மருத்துவமனை திறப்பதில்லை. இதனால், சரியான நேரத்திற்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்காததால், மாடுகள் இறந்து விடுகிறது.
எனவே, மாலை நேரத்திலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களை திறந்து, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -