ADDED : டிச 20, 2024 12:07 AM

திருவள்ளூர்,
நெமிலி அகரம் - மேல்விளாகம் பாலம் கட்டுமான பணி மழையால் நிறுத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது, நெமிலி அகரம் ஊராட்சி.
இந்த ஊராட்சிக்கு அருகில், நெமிலி அகரம் காலனி, கீழ்விளாகம் கிராமம் மற்றும் காலனி, மேல்விளாகம் கிராமம் மற்றும் காலனி, கலியனுார் கிராமம் மற்றும் காலனி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இக்கிராமவாசிகள், கல்வி, வேலை, மருத்துவ தேவை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க திருவள்ளூர் செல்ல வேண்டும். இதற்காக, கிராமவாசிகள், நெமிலி அகரம் காலனியில் இருந்து, கொசஸ்தலை ஆற்றை தரைப்பாலம் வழியாக கடந்து, விடையூர் வந்து, அங்கிருந்து திருவள்ளூர் செல்கின்றனர்.
மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் அடிக்கடி சேதமடைந்தது. அச்சமயங்களில், கிராமவாசிகள் நார்த்தவாடா, கூடல்வாடி வழியாக மஞ்சாங்குப்பம், பட்டரைபெரும்புதுார் வழியாக 20 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டி உள்ளது.
இதையடுத்து, நெமிலி அகரம் - மேல்விளாகம், கொசஸ்தலை ஆற்றில் 'நபார்டு' திட்டத்தில், 13.69 கோடி ரூபாய் மதிப்பில் பால பணி, கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கியது. 18 மாதத்திற்குள் பணி நிறைவடையும் என, அப்போது தெரிவிக்கப்பட்டது.
தற்போது, 70 சதவீதம் வரை பணி நிறைவடைந்த நிலையில், மீண்டும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும், மீதம் உள்ள பணி துவங்கி, 5 மாதத்திற்குள் பால பணி நிறைவடையும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.