/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூந்தமல்லியில் 230 கி.வோ., திறனில் புதிய துணை மின் நிலையம்: தாமதிக்கும் வாரியம்
/
பூந்தமல்லியில் 230 கி.வோ., திறனில் புதிய துணை மின் நிலையம்: தாமதிக்கும் வாரியம்
பூந்தமல்லியில் 230 கி.வோ., திறனில் புதிய துணை மின் நிலையம்: தாமதிக்கும் வாரியம்
பூந்தமல்லியில் 230 கி.வோ., திறனில் புதிய துணை மின் நிலையம்: தாமதிக்கும் வாரியம்
ADDED : நவ 19, 2025 05:17 AM
சென்னை: மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பூந்தமல்லியில், 230 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தாமல், மின் வாரியம் தாமதித்து வருகிறது.
சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள சென்னீர்குப்பத்தில் மின் வாரியத்திற்கு, 33/ 11 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் உள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லியில் இருந்து லைட்ஹவுஸ் வரை ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
எனவே, சென்னீர்குப்பத்தில், 230 கி.வோ., திறனில், 'காஸ் இன்சுலேட்டட் சப் ஸ்டேஷன்' எனப்படும் குறைந்த இடத்தில் அதிக திறனுடன் செயல்படும் துணைமின் நிலையத்தை அமைக்க, 2022ல் முடிவானது.
பின், மெட்ரோ ரயில் நிர்வாகம், பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி, துணை மின் நிலையம் அமைக்க இடம் வழங்கியது.
அங்கு, துணைமின் நிலையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் துவங்கின. திடீரென, நிதி நிலைமையை காரணம் காட்டி, அத்திட்டத்தை மின் வாரியம் கைவிட்டது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பூந்தமல்லியில் அமைய உள்ள, 230 கி.வோ., துணைமின் நிலையத்தில் இருந்து திருமழிசை, மாங்காடு, செம்பரம்பாக்கம், போரூர், 110 கி.வோ., துணை மின் நிலையங்களுக்கும் கூடுதல் மின்சாரமும், மெட்ரோ ரயிலுக்கு தனி வழித்தடத்திலும் மின்சாரம் வினியோகம் செய்ய முடிவானது. திடீரென, துணைமின் நிலைய திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, பூந்தமல்லியை சுற்றி, மின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், பூந்தமல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் துவக்கப்பட்டு வருகின்றன.
இதனால், அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லியில் உள்ள மின் வினியோக சாதனங்களில் கூடுதல் மின் பளு காணப்படுகிறது. இது, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்.
எனவே, தற்போது, பூந்தமல்லி, 230 கி.வோ., துணைமின் நிலைய பணிகளை துவக்கினால்தான், இரு ஆண்டுகளுக்குள் முடிக்க முடியும். எனவே, அந்த பணிகளை விரைவாக துவக்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

