‘சாலை வலையமைப்பு’ என்ற பெயரில் புதிய திட்டம்! 4 மாவட்டங்களுக்காக துவக்குது ‘கும்டா’
‘சாலை வலையமைப்பு’ என்ற பெயரில் புதிய திட்டம்! 4 மாவட்டங்களுக்காக துவக்குது ‘கும்டா’
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:14 PM
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ‘சாலை வலையமைப்பு’ என்ற பெயரிலான புதிய திட்டத்தை செயல்படுத்த, ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான ‘கும்டா’ திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, தொடரும் நெரிசலுக்கு தீர்வு காணவும், குக்கிராமங்களை இணைக்கும் வகையில் தரமான சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நெரிசலை குறைக்க, புறவழிச்சாலை, வெளிவட்ட சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
இருந்தபோதிலும் நெரிசலுக்கு தீர்வு ஏற்படாமல், வாகன ஓட்டிகளின் அவதி தொடர்கிறது.
புதிய சாலைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில், அவற்றுடன் உள்ளூர் சாலைகளுக்கு போதிய இணைப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இதுவும், நெரிசலுக்கு காரணமாக மாறிவிடுகிறது.
இதை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகரில், 150 இடங்களில் உள்ளூர் சாலைகளை, பிரதான சாலைகளுடன் இணைக்கும் வகையில், சாலை வலையமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான நடவடிக்கைகளை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகர் பகுதியை விரிவாக்கும் நடவடிக்கையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் இணைக்கப்பட உள்ளன.
இதையடுத்து, விரிவாக்க பகுதிகளில் சாலை வலையமைப்பு திட்டங்களை செயல்படுத்த கும்டா திட்டமிட்டுள்ளது.
சென்னை பெருநகருடன் இணைக்கப்படும் பகுதிகளுக்கான அடுத்த, 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, அரசின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், நான்கு மாவட்டங்களில், 12 கோடி ரூபாயில் சாலை வலையமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன்படி, எந்தெந்த பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பது, ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவுபடுத்துவது, சாலைகளின் நீளத்தை அதிகரிப்பது, பிரதான சாலைகளுடன் இணைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என, கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் சிறு கிராமங்களுக்கும், வளர்ச்சியடைந்த நகர்ப்புற பகுதிகளுக்கும் சாலை இணைப்பு ஏற்படும் என்றும், கும்டா அதிகாரிகள் கூறினர்.
