/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி நீர்தேக்கத்தில் நீர் அளவை துல்லியமாக அளவிட புதிய மாடம்
/
பூண்டி நீர்தேக்கத்தில் நீர் அளவை துல்லியமாக அளவிட புதிய மாடம்
பூண்டி நீர்தேக்கத்தில் நீர் அளவை துல்லியமாக அளவிட புதிய மாடம்
பூண்டி நீர்தேக்கத்தில் நீர் அளவை துல்லியமாக அளவிட புதிய மாடம்
ADDED : ஏப் 21, 2025 11:48 PM

திருவள்ளூர், பூண்டி நீர்த்தேக்கத்தின் ஆற்றின் மேல் நீரோட்ட பாதையில், நீரின் கொள்ளளவை துல்லியமாக அளவிட கிணற்றுடன் கூடிய மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உருவாகிய கொசஸ்தலை ஆறு, பள்ளிப்பட்டு, நகரி, திருத்தணி, பட்டரைபெரும்புதுார், பூண்டி, சோழவரம் வழியாக பழவேற்காடு அருகில் கடலில் கலக்கிறது. கடந்த 1944ம் ஆண்டு பூண்டியில், கொசஸ்தலை ஆற்றின் நடுவில் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.
நீர்த்தேக்கத்தின் நீளம், 770 அடி, அகலம் 18 அடி. உயரம் 35 அடி. மொத்தம் 3.23 டி.எம்.சி., தண்ணீரை சேமித்து வைக்கலாம். நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரிநீரை வெளியேற்ற, 16 மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன. நீர்த்தேக்க ஷட்டர் அருகில், நீர் அளவை கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும், நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் நீரியல் மற்றும் நீர்நிலையியல் ஆய்வுக் கழகம் அமைந்துள்ளது. இந்த ஆய்வுக் கழகத்திற்கு, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், மதகு கிணறு அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த 10 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நீரியல் மற்றும் நீர்நிலையியல் ஆய்வு கழகத்திற்கு செல்லும் மதகு கிணறு சேதமடைந்தது. இதையடுத்து, தமிழக நீர்வளத்துறை, 10.05 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணியை மேற்கொண்டது.
மேலும், புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கத்தில் இருப்பது போல், நீர்த்தேக்கத்தின் நடுவில், கொசஸ்தலை ஆற்றின் மேல் நீரோட்ட பாதையில், மொத்த கொள்ளளவை துல்லியமாக கண்டறியும் வகையில் அளவீட்டுடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.
நீர்த்தேக்கத்தை பார்வையிட வரும் அதிகாரிகள் மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மட்டும் அந்த அளவீடு கிணற்றுடன் கூடிய மாடத்திற்கு அனுமதிக்கப்படுவர். பார்வையாளர்கள் யாரும் அங்கு செல்ல அனுமதி கிடையாது.
இதன் வாயிலாக, வெள்ள காலத்தில், நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீரின் அளவை, நீர்வளத்துறையினர் துல்லியமாக கண்டறிந்து, நீர்த்தேக்கத்தை பாதுகாக்க முடியும்.