/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் முதலியார், ஆதிதிராவிடர்கள் ஓட்டு யாருக்கு?
/
திருத்தணியில் முதலியார், ஆதிதிராவிடர்கள் ஓட்டு யாருக்கு?
திருத்தணியில் முதலியார், ஆதிதிராவிடர்கள் ஓட்டு யாருக்கு?
திருத்தணியில் முதலியார், ஆதிதிராவிடர்கள் ஓட்டு யாருக்கு?
ADDED : மே 12, 2016 02:28 AM
திருத்தணி தொகுதியில், அ.தி.மு.க., - காங்., வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டுகள் முதலியார், ஆதிதிராவிடர்களிடத்தில் உள்ளது.திருத்தணி சட்டசபை தொகுதியில், முதலியார், 75 ஆயிரம் பேரும்; வன்னியர், 65 ஆயிரம் பேரும்; ஆதிதிராவிடர், 45 ஆயிரம் பேரும்; நாயுடு, 34 ஆயிரம் பேரும்; முஸ்லிம், 27 ஆயிரம் பேரும்; இதரர், 27,660 பேரும் என மொத்தம், 2,73,660 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம், 15 பேர் போட்டியிடுகின்றனர்.
உள்ளடி வேலை:அ.தி.மு.க., வேட்பாளர் பி.எம்.நரசிம்மன் உள்ளூர்வாசி; வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்பட்டு தொகுதியாக இருந்த போது, மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். கிராமங்களில் நன்கு அறிமுகம் ஆனவர். தொகுதியில் பல்வேறு பணிகள் செய்துள்ளார். ஆனால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர், இவர் மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கனுார், ராஜாநகரம் ஆகிய இடங்களில் வன்னியர், ஆதிதிராவிடர்களுக்கு இடையே நடந்த கலவரங்களில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டார். ஆதிதிராவிடர்கள் சிலர் இவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். உள்ளடி வேலை, ஆதிதிராவிடர்கள் அதிருப்தியால் வெற்றி இழுபறியில் உள்ளது.காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜி.சிதம்பரம், சென்னை அம்பத்துார் பகுதியைச் சேர்ந்தவர். தொகுதிக்கு புதுமுகம். செங்குந்த முதலியார் இனத்தைச் சேர்ந்தவர்; வழக்கறிஞர். கூட்டணி கட்சி தி.மு.க., நிர்வாகிகளை அரவணைத்து, தாராளமாக செலவு செய்வதால், தி.மு.க.,வினர் சுறுசுறுப்புடன் பிரசாரம் செய்து ஜெயிக்க வைக்க முயற்சிக்கின்றனர். முதலியார் ஓட்டுகளை நம்பியுள்ளார்.
தே.மு.தி.க., வேட்பாளர், டி.கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலராக உள்ளார். நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்; திருத்தணியில் வசிக்கிறார்.கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி முழுவதும் சென்று வாக்குறுதிகள் கொடுத்து, ஓட்டு சேகரிக்கிறார்.நாயுடு ஓட்டுகளை நம்பியுள்ளார்.
பா.ஜ., வேட்பாளர் எம்.சக்கரவர்த்தி, திருத்தணியைச் சேர்ந்தவர்; தொழிலதிபர். நாயுடு இனத்தைச் சேர்ந்தவர். கடந்த, 2001 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு, குறைந்த ஓட்டுகளில் தோற்றார். தொகுதியில், தொடர்ந்து நலத்திட்ட உதவிகள், பள்ளி கட்டடம், இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறார்.
இழுபறியில்...பா.ம.க., வேட்பாளர் அ.வைத்தியலிங்கம், சென்னை தி.நகரைச் சேர்ந்தவர்; மருத்துவர். முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் நெருங்கிய நண்பர். தொகுதி பா.ம.க., நிர்வாகிகளுக்கு அறிமுகம் இல்லாதவர். முதலியார், வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் ஓட்டுகள் பிரிவதால், யாருக்கு வெற்றி என்பது இழுபறியாகவே உள்ளது.