ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலி திக்குமுக்காடும் திருவாலங்காடு பள்ளி
ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலி திக்குமுக்காடும் திருவாலங்காடு பள்ளி
ADDED : ஆக 26, 2026 04:01 PM
திருவாலங்காடு, ஆக. 27–
திருவாலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களால், திக்குமுக்காடி வருவதாக ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த பள்ளியில், ஒரு இளநிலை உதவியாளர், இரண்டு ஆய்வக உதவியாளர்கள், இரண்டு ரெக்கார்ட் கிளார்க்குகள், ஒரு துாய்மை பணியாளர்-, ஒரு இரவு காப்பாளர் என, ஏழு பேர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த ஏழு பணியிடங்களும், கடந்த 5 முதல் 15 ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணிகளையும், தாங்களே செய்ய வேண்டியுள்ளதாக, ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இரவு காப்பாளர் இல்லாததால், பள்ளி வளாகத்திற்குள் நுழையும், ‘குடி’மகன்கள் உள்ளிட்ட சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
