135 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் ஒண்ணுமில்ல! வாடகைக்கு வீடு எடுத்து பணி செய்ய வேண்டிய அவலம்
135 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் ஒண்ணுமில்ல! வாடகைக்கு வீடு எடுத்து பணி செய்ய வேண்டிய அவலம்
UPDATED : செப் 21, 2026 08:38 PM
ADDED : செப் 21, 2026 08:34 PM

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் மொத்தம் உள்ள 169 வருவாய் கிராமங்களில், 135 கிராம நிர்வாக அலுவலகங்களில், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. உரிய வசதிகளின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிய அச்சப்பட்டு, வி.ஏ.ஓ.,க்கள் வெளியூரில் வாடகைக்கு வீடு எடுத்து பணிபுரிந்து வருகின்றனர். இதனால், வருவாய், இறப்பு, வாரிசு உள்ளிட்ட சான்று பெற, அப்பகுதி மக்கள் நாட்கணக்கில் அலைந்து தவித்து வருகின்றனர்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய மூன்று தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இந்த மூன்று தாலுகாக்களிலும், மொத்தம் 169 வருவாய் கிராமங்கள் உள்ளன.
ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும், ஒரு கிராம நிர்வாக அலுவலர் நியமித்து, அரசு நலத்திட்ட உதவிகள், விவசாயிகளுக்கு தேவையான சான்றுகள், மாணவ - மாணவியருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர, வருவாய் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவைப்படும் சான்றுகள், நில அளவை செய்து பட்டா வழங்குதல், அரசு தொகுப்பு வீடுகளுக்கு தேவையான சான்று வழங்குதல் உட்பட, பல்வேறு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கி பணிபுரிய, அந்தந்த வருவாய் கிராமங்களில் அலுவலகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இக்கட்டடங்களை ஒன்றிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பல கட்டடங்கள் சேதம் அடைந்தும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்தும் உள்ளன.
மேலும், பல அலுவலகங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தப்படவில்லை. அலுவலக கட்டடத்தில் சிறுசிறு பராமரிப்பு பணிகள் நிலுவை உள்ளதால், கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகத்தில் நிம்மதியாக பணிபுரிய முடியவில்லை. மேலும், மழை வந்தால், கட்டடத்தில் இருந்து மழைநீர் ஒழுகி ஆவணங்கள் நனைந்து விடுகின்றன.
மின்வசதி இல்லாததால் ஆவணங்கள், சான்றுகளை ஆன்லைன் மூலம் சரிபார்ப்பது, பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதனால், பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள், காலை நேரத்தில் மட்டுமே கிராமங்களுக்கு சென்று, நண்பகல் முதல் இரவு 7:00 மணி வரை, திருத்தணி நகரம், பள்ளிப்பட்டு பஜார், ஆர்.கே.பேட்டை பஜார் ஆகிய இடங்களில், வீடுகள் அல்லது அறைகள் வாடகைக்கு எடுத்து பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது:
ஊராட்சிகளில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் இடியும் நிலையிலும், மின்வசதி இல்லாமலும் உள்ளன. அதனால், தினமும் அங்கு சென்று பணிபுரிய முடியவில்லை.
ஆகையால், பஜார் பகுதியில் வாடகை அறையில் தங்கி, பயனாளிகளுக்கு தேவைப்படும் சான்றுகள் வழங்கி வருகிறோம். எங்களுக்கு தான் வீண் செலவு.
கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை சீரமைத்து, உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால், அங்கு தங்கி பணிபுரிவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கட்டடங்கள் சேதமானது குறித்து, ஆர்.டி.ஓ.,விடம் எங்கள் சங்கம் மூலம் கடிதம் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கலெக்டருக்கு பரிந்துரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் சேதம் அடைந்தது, இடியும் நிலையில் உள்ளது, மின்வசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாதது, கட்டடங்களே இல்லாதது என தனித்தனியாக பிரித்து, வருவாய் கிராமத்தின் பெயர்கள் குறித்து, கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளோம். கட்டடம் அவசியம் தேவை எனவும், கலெக்டரிடம் வலியுறுத்தி வருகிறேன். - ராஜகோபால், வருவாய் கோட்டாட்சியர், திருத்தணி.
