/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்பயிரில் சத்து குறைபாடு: வேளாண் துறை ஆலோசனை
/
நெற்பயிரில் சத்து குறைபாடு: வேளாண் துறை ஆலோசனை
ADDED : பிப் 17, 2024 11:24 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட விதைப் பரிசோதனை நிலைய, மூத்த வேளாண் அலுவலர் வே.சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நெற்பயிரில் துத்தநாக நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறையால், இலையின் அடிப்பாகத்தில் வெளிரியத்தன்மை காணப்படும்.
முதிர்ந்த இலைகளில் பழுப்பு புள்ளிகள் காணப்படும். இச்சத்து குறைவால் துார்கட்டுதலும், பயிரின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு பயிர் முழுமையாக அழிந்து விடக்கூடும்.
நெற்பயிரின் தோகைகள் துருப்பிடித்தாற்போன்று காணப்படும். பயிரின் வளர்ச்சி சீராக இல்லாமலும், பலதரப்பட்ட முதிர்ச்சியுடனும் காணப்படும்.
இதை நிவர்த்தி செய்ய, மண்ணில் அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட்டை இட வேண்டும். ஐந்து கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கலந்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
மேலும், “சூடோமோனஸ் குளோரோபில்” மற்றும் “பேசில்லஸ் மெகாடெரியம்” என்ற பாக்டீரியா கரைசலை தமிழக வேளாண் பல்கலைக் கழகம் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறது.
இந்த பாக்டீரியா கரைசலை ஏக்கருக்கு ஒரு கிலோ பவுடரை மணலுடன் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் நெல்மணிகள் திரட்சியாக மாற உதவுகிறது.
உரச் செலவும் குறைவு. தேவையான நோய் எதிர்ப்புத்திறன் காரணி அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.