/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிருஷ்ணாபுரம் அணையில் அதிகாரிகள் ஆய்வு
/
கிருஷ்ணாபுரம் அணையில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 18, 2024 02:30 AM

பள்ளிப்பட்டு,:ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், பள்ளிப்பட்டு வழியாக பாய்ந்து கொசஸ்தலை ஆறாக உருவெடுக்கிறது. கொசஸ்தலை ஆறு, சொரக்காய்பேட்டை, நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் வழியாக பாய்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும், கொசஸ்தலை ஆற்றின் நதிமூலமாக, கிருஷ்ணாபுரம் அணை விளங்குகிறது.
தமிழகத்தில் பருவ மழை பெய்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையின் நீர் இருப்பு குறித்து பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சிவகுமார், ஆந்திர மாநில பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அணையின் மொத்த உயரமான 60 அடியில், தற்போது 18 அடி மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், தற்போதைக்கு அணையில் தண்ணீர் திறப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவ மழை துவங்கியுள்ள நிலையில், தமிழக வருவாய் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் அணை நிலவரம் குறித்து கவனித்து வருகின்றனர்.