தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கும்மிடி சாலையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு... ஒரு வாரம் கெடு!நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் 'நோட்டீஸ்'

கும்மிடி சாலையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு... ஒரு வாரம் கெடு!நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் 'நோட்டீஸ்'

கும்மிடி சாலையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு... ஒரு வாரம் கெடு!நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் 'நோட்டீஸ்'


UPDATED : ஜூன் 16, 2026 09:32 PM

ADDED : ஜூன் 16, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 09:32 PM ADDED : ஜூன் 16, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகள் அனைத்தையும், ஒரு வார காலத்திற்குள் தாமாக முன் வந்து, சம்பந்தப்பட்டோர் அகற்றிக்கொள்ள வேண்டும் என, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிப்பு 'நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் முதல் கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் வரையிலான, 4.6 கி.மீ., ஜி.என்.டி., சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேற்கண்ட சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து, வீடுகள் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், நுாற்றுக்கணக்கான நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளும் இயங்கி வருகின்றன.

இதனால், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, பொதுமக்கள் தினசரி சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

போக்குவரத்து நெருக்கடியால் விபத்துகள் ஒரு புறம் இருக்க, நகருக்குள் வர வேண்டிய பல பேருந்துகள், புறவழிச்சாலை வழியாகவே சென்று வருகின்றன.

இதனால், பயணியர் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசர தேவை வாகனங்கள், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேருந்து நிலைய வளாகத்தில் 'ஷெட்' அமைத்து கடைகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், அங்குள்ள இட நெருக்கடி, பாதுகாப்பற்ற சூழல் உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து, கடைகளை இடம் மாற்றம் செய்ய தயக்கம் காட்டி, மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழலில், மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், நேற்று அறிவிப்பு 'நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 'ஒரு வார காலத்திற்குள், சாலையோரத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகளை, தாமாக முன் வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் முதல், கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் வரையிலான ஜி.என்.டி., சாலையோர ஆக்கிரமிப்புகள் அனைத்தும், அடுத்த வாரத்திற்குள் முழுமையாக அகற்றப்படும். அதன்பின், மீண்டும் ஆக்கிரமிப்புகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க, குழு நியமித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். - பிரபாகரன், உதவி பொறியாளர், நெடுஞ்சாலை துறை, கும்மிடிப்பூண்டி.


ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிக்க காரணம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டடங்களை, நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு, சாலையோர வியாபாரிகள் சார்பில், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் விளைவாக, சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படும் என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதுவரை, சாலையோரம் கடைகளை வைத்துக்கொள்ள, வாய்வழி ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், பயனற்று போனது. அரசு தரப்பில், சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு, சாலையோரங்களில் கடைகளை அமைக்க தொடங்கினர். சாலையை ஆக்கிரமித்தால் அரசே இடம் தரும் எண்ணத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகியதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னர், 190 ஆக இருந்த சாலையோர கடைகள், தற்போது 250க்கும் மேல் அதிகரித்துள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us