/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்: கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் பழனிசாமி உறுதி
/
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்: கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் பழனிசாமி உறுதி
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்: கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் பழனிசாமி உறுதி
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்: கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் பழனிசாமி உறுதி
ADDED : டிச 31, 2025 05:39 AM

கும்மிடிப்பூண்டி: ''தீயசக்தி தி.மு.க.,வை வீழ்த்த, 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று, கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கவரைப்பேட்டையில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், பழனிசாமி பேசியதாவது:
குடும்ப கட்சிதான் தமிழகத்தை ஆள்கிறது. ஆட்சி, அதிகாரம் அனைத்தும் அந்த குடும்பத்திற்குதான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் கட்சி தலைமைக்கும், ஆட்சி தலைமைக்கும் வர முடியும்.
பார்லிமென்ட் தி.மு.க., குழு தலைவராக இருந்த டி.ஆர்.பாலுவை நீக்கி விட்டு, ஸ்டாலினின் தங்கை கனிமொழியை நியமித்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன், கட்சியின் பொதுச்செயலராக, முதல்வராக வர முடியும்.
விமர்சனம் தி.மு.க., என்பது கட்சி அல்ல; 'கார்ப்பரேட்' நிறுவனம். ஆட்சிக்கு வந்து, 56 மாதங்களில் 8 கோடி மக்களை சுரண்டி, ஒரு குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், சுரண்டலுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அ.தி.மு.க.,வை எம். ஜி.ஆர்., துவங்கியபோது, 'தி.மு.க.,வை தீயசக்தி' என்றார். அந்த தீயசக்தி தி.மு.க.,வை, இன்று வரை வீழ்த்தி வருகிறது. இப்போது புதிது புதிதாக வந்து, ஏதேதோ பேசுகின்றனர்.
எதிரிகளை வீழ்த்தும் பலமுள்ள கட்சி அ.தி.மு.க., மட்டுமே. அ.தி.மு.க., நேற்று துவங்கிய கட்சி அல்ல; பொன் விழா கண்ட கட்சி; 31 ஆண்டுகள் ஆண்ட கட்சி; தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணமான கட்சி. வரும் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளில், 95 சதவீதத்தை நிறைவேற்றினோம். அ.தி.மு.க., பற்றி பேச எதுவும் இல்லை என்பதால், கூட்டணி கட்சியான பா.ஜ.,வை மதவாத கட்சி என்று, முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கிறார்.
கடந்த 1999 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வோடு தி.மு.க., கூட்டணி அமைத்தது. வாஜ்பாய் அமைச்சரவையில், அங்கம் வகித்தது .
கடந்த 2001 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் வி.சி.,யும் இருந்தது. அப்போது, பா.ஜ., நல்ல கட்சி. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால் மட்டும் மதவாத கட்சியா?
அ.தி.மு.க.,வை விமர்சிக்கும் முன், வரலாற்றை நினைத்து பார்க்க வேண்டும். இனி பச்சோந்தி போல நிறம் மாற முடியாது. தி.மு.க.,வை வீழ்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.
லாரி 'மக்கர்' தி.மு.க., என்ற இன்ஜின் இல்லாத காரை, 10 ஆண்டுகளாக கூட்டணி என்கிற லாரி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இப்போது, இந்த லாரி 'மக்கர்' செய்கிறது.
ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்., - வி.சி., கேட்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை என, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் செயலர் சண்முகம் கூறுகிறார். தி.மு.க., கூட்டணிக்குள் புகைச்சல் கிளம்பி விட்டது.
இந்த கூட்டணி நிலைக்குமா என்ற, சந்தேகம் மக்களுக்கு வந்து விட்டது. தி.மு.க., கூட்டணி நிலைக்காது என்பதற்கு, இதுவே சான்று.
அரசு நலத்திட்டங் களின் தாக்கம் குறித்து, மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக ஆய்வு செய்ய, 43 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஆட்சிக்கு வர முடியாது என முடிவு செய்து, மக்கள் பணத்தை அபகரிக்க முடிவு செய்து விட்டனர்.
அ.தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று, 100 நாள் வேலை திட்ட நாட்களை, 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தில் மாநில அரசுக்கான அதிகாரமும் பறிக்கப்படவில்லை.
ஆனாலும், சட்டசபை தேர்தல் வருவதால், தவறான தகவல்களை பரப்பி ஆதாயம் தேட, தி.மு.க., முயற்சிக்கிறது. இப்போது, தமிழகம் போராட்ட களமாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், அ.தி.மு.க., கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் சிறுணியம் பலராமன் தலைமையில், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ., கே.எஸ்.விஜயகுமார் மேற்பார்வையில், பொன்னேரி முன்னாள் எம்.எல்.ஏ., பொன்ராஜா, கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலர்கள் எஸ்.எம்.ஸ்ரீதர், டி.சி.மகேந்திரன், ஜெ.ரமேஷ்.
கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், கும்மிடிப்பூண்டி நகர செயலர் எஸ்.ரவி, எல்லாபுரம் ஒன்றிய செயலர்கள் வேதகிரி, கோதண்டன், பூண்டி ஒன்றிய துணை செயலர் சுதாகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

