திறந்தநிலையில் ஆழ்துளை கிணறு பள்ளி மாணவ - மாணவியர் அச்சம்
திறந்தநிலையில் ஆழ்துளை கிணறு பள்ளி மாணவ - மாணவியர் அச்சம்
ADDED : மார் 02, 2026 05:11 AM

ஆர்.கே.பேட்டை: அரசு தொடக்க பள்ளி எதிரே திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறால், பள்ளி மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வெள்ளாத்துாரில், வெள்ளாத்துாரம்மன் கோவிலை ஒட்டி அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று கைவிடப்பட்டுள்ளது.
இதை, ஊராட்சி நிர்வாகம் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றியுள்ளனர். ஆனால், ஆழ்துளை கிணறை முறையாக மூடி போட்டு மூடாமல், திறந்தநிலையில் விட்டுள்ளனர்.
இந்த ஆழ்துளை கிணறில், தற்போது 10 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது. இதை ஒட்டியுள்ள குளத்தில் தண்ணீர் நிறைந்துள்ளதால், ஆழ்துளை கிணறிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், திறந்தநிலையில் உள்ள இந்த ஆழ்துளை கிணறால், பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, ஆழ்துளை கிணறை முறையாக மூடி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
