/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழை எச்சரிக்கையால் ஏரிகளில் நீர் திறப்புக்கு.. எதிர்ப்பு: . நகராட்சி நிர்வாகம் - நீர்வளத் துறை திடீர் மோதல்
/
மழை எச்சரிக்கையால் ஏரிகளில் நீர் திறப்புக்கு.. எதிர்ப்பு: . நகராட்சி நிர்வாகம் - நீர்வளத் துறை திடீர் மோதல்
மழை எச்சரிக்கையால் ஏரிகளில் நீர் திறப்புக்கு.. எதிர்ப்பு: . நகராட்சி நிர்வாகம் - நீர்வளத் துறை திடீர் மோதல்
மழை எச்சரிக்கையால் ஏரிகளில் நீர் திறப்புக்கு.. எதிர்ப்பு: . நகராட்சி நிர்வாகம் - நீர்வளத் துறை திடீர் மோதல்
ADDED : நவ 17, 2025 03:16 AM

சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என, வானிலை மையம் கூறியதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து நேற்று, விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வளத்துறையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நகராட்சி நிர்வாகத் துறை, 'மழை பெய்தால் சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும்' என காட்டமாக கூறியதை அடுத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய்கண்டிகை ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.7 டி.எம்.சி., ஆகும். தற்போதைய நிலவரப்படி, 9.39 டி.எம்.சி., நீர்இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில், இந்த ஏரிகளுக்கு அதிகளவில் நீர்வரத்து கிடைக்கிறது. பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆந்திர மாநில எல்லையில் உள்ளன.
அங்குள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும், தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்தும், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து கிடைக்கிறது. பூண்டி ஏரிக்கு அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை.
எனவே, இங்கிருந்து பேபி கால்வாய் வாயிலாக புழல் ஏரிக்கும், இணைப்பு கால்வாய் வாயிலாக செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் அனுப்பப்படுகிறது.
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி அருகே, சென்னை குடிநீர் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு நீர் சுத்திகரிக்கப்பட்டு, சென்னை முழுதும் குழாய்கள் மற்றும் லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், தேசிய அணைகள் பாதுகாப்பு இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. வடகிழக்கு பருவமழை காலங்களில், அணைகள் பாதுகாப்பு விதிப்படி, நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிகளில் நீர் இருப்பை குறைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால், ஏரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில் உள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட ஏழு மாவட்டங்களுக்கு இன்று, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
அதிகளவு மழை பெய்தால், ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு, வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என, நீர்வளத் துறை கருதுகின்றனர். இதனால், ஏரிகளில் உள்ள நீரை குறைக்கும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
அதன்படி, பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 2,500 கனஅடி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து விநாடிக்கு தலா 600 கனஅடி நீர், வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரி நீர் திறப்பால், சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என, நகராட்சி நிர்வாகத் துறை எதிர்ப்பு தெரிவித்ததோடு, நீர்வளத் துறையுடன் மல்லுக்கட்டியது.
இந்த எதிர்ப்பு காரணமாக, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து விநாடிக்கு தலா 1,000 கனஅடி நீரை வெளியேற்ற திட்டமிட்டிருந்த நீர்வளத்துறை, 600 அடியாக குறைத்துள்ளது.
இரண்டு துறைகளிடையே ஏற்பட்டுள்ள மோதலால், 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, மீண்டும் சென்னையில் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகராட்சி நிர்வாக துறையின் கட்டுப்பாட்டில் சென்னை மாநகராட்சியும், சென்னை குடிநீர் வாரியமும் உள்ளது. இதனால், குடிநீர் தேவை என்று வரும்போது, நீரை சேமிக்கவும், வெள்ள அபாயம் என வரும்போது, ஏரியில் கூடுதல் நீரை திறக்கவும், நகராட்சி நிர்வாகத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை சொல்கின்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி கூடுதல் நீரை திறக்க நீர்வளத்துறை திட்டமிட்டது. 'மழை பெய்யாதபோது எதற்கு நீர் திறக்கிறீர்கள்; கோடைகாலத்தில் பயன்படுத்த நீரை சேமித்து வையுங்கள்' என, நகராட்சி நிர்வாகத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர்.
இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு, நீர் திறப்பதற்கான அதிகாரத்தை நீர்வளத் துறைக்கு முழுமையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

