ADDED : செப் 11, 2026 09:02 PM
திருவள்ளூர்: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுதும், 20 நாட்களுக்கு மேல் நெல் அறுவடை நடந்து வருகிறது. ஆனால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை திறந்தவெளியில் உலர வைப்பதால், அவ்வப்போது பெய்து வரும் மழையில் நனைந்து விடுகிறது. இதனால், நெல்லை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர், திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தை முற்றுகையிட்டனர்.
பின், மண்டல மேலாளர் ராஜேஷிடம், நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டுமென மனு அளித்தனர்.
