/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஊராட்சி பணியாளர்கள் கடும் அவதி
/
சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஊராட்சி பணியாளர்கள் கடும் அவதி
சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஊராட்சி பணியாளர்கள் கடும் அவதி
சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஊராட்சி பணியாளர்கள் கடும் அவதி
ADDED : ஏப் 21, 2025 11:39 PM
மீஞ்சூர், மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகளில் பம்ப் ஆப்பரேட்டர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, கடந்த ஜனவரி வரை, மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
அம்மாதம் தலைவர், வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், 8 - 9 ஊராட்சிகளை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் பதிவிக்காலம் முடிந்து அதிகாரிகளின் கண்காணிப்பில் ஊராட்சி நிர்வாகங்கள் வந்த பின், துாய்மை பணியாளர்கள், பம்ப் ஆப்பரேட்டர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தடப்பெரும்பாக்கம், அனுப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், மார்ச் மாதத்திற்கான சம்பளம், தற்போது வரை வழங்கப்படவில்லை. குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் இவர்கள், இந்த வருவாயை கொண்டே அத்தியாவசிய தேவைகளை நிறேவேற்றி வருகின்றனர்.
இதுகுறித்து துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
தனியார் வங்கிகளில் வீட்டு தேவைகளுக்கு கடன் வாங்கி, அதை தவணை முறையில் செலுத்துகிறோம். குறிப்பிட்ட நாளில் வங்கி கணக்கில் இருந்து தவணை தொகையை எடுத்துக் கொள்கின்றன.
மூன்று மாதங்களாக குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்குவதில்லை. இதனால், தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கடன் கொடுத்த தனியார் நிறுவனங்கள் அபராதத்துடன் கடனை வசூலிக்கின்றன.
அதிகாரிகள் உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக துாய்மை பணியாளர்கள் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர்களுக்கான சம்பளத்தை மாதந்தோறும், உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.