/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி கழிப்பறையை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்
/
அரசு பள்ளி கழிப்பறையை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்
அரசு பள்ளி கழிப்பறையை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்
அரசு பள்ளி கழிப்பறையை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்
ADDED : ஜூலை 11, 2025 01:13 AM

திருத்தணி:திருத்தணி அருகே அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
திருத்தணி- மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை, கன்னிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 25க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம், மாணவ- மாணவியருக்கு தனித்தனியாக கழிப்பறை கட்டடம் உள்ளது.
பள்ளியின் அருகே கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம், மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம், கிராம நிர்வாக அலுவலகம், நுாலகம் ஆகிய கட்டடங்கள் உள்ளன.
இந்நிலையில் பழுதடைந்து உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்,30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஒன்றிய அதிகாரிகள் உத்தரவுப்படி புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதற்கு அரசு பள்ளி விளையாட்டு மைதானம் நடுவிலும், மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லும் வழியிலும் பள்ளம் தோண்டி கட்டடப் பணி துவங்கியது.
இதனால் மாணவர்கள் கழிப்பறைக்கு செல்வதற்கும், விளையாடுவதற்கும் சிரமம் ஏற்படும்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பழுதடைந்துள்ளதால், அந்த கட்டடத்தை இடித்து அகற்றி, அதே இடத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டலாம். ஆனால் மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லும் வழியில் கட்டினால், மாணவர்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு சிரமம் ஏற்படும். எனவே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் இடத்தை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.