/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நள்ளிரவில் ரயில் போக்குவரத்து பாதிப்பு மின் கொக்கி பழுதால் பயணியர் தவிப்பு
/
நள்ளிரவில் ரயில் போக்குவரத்து பாதிப்பு மின் கொக்கி பழுதால் பயணியர் தவிப்பு
நள்ளிரவில் ரயில் போக்குவரத்து பாதிப்பு மின் கொக்கி பழுதால் பயணியர் தவிப்பு
நள்ளிரவில் ரயில் போக்குவரத்து பாதிப்பு மின் கொக்கி பழுதால் பயணியர் தவிப்பு
ADDED : ஜன 10, 2025 10:39 PM
பொன்னேரி:சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரையில் இருந்து, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தினமும், 80 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம், இரவு 9:20 மணிக்கு, சென்னை கடற்கரையில் இருந்து, கும்மிடிப்பூண்டி நோக்கி புறநகர் ரயில் புறப்பட்டது.
இது, இரவு 10:35 மணிக்கு மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து அனுப்பம்பட்டு ரயில் நிலையம் நோக்கி பயணிக்கும்போது, திடீரென ரயிலின் மேற்பகுதியில் இருந்த மின்சார கொக்கி பழுதானது.
இதனால், ரயில் மீஞ்சூர் - அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றது. அடுத்தடுத்து வந்த புறநகர் மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தகவல் அறிந்த ரயில்வே பராமரிப்புத் துறையினர் அங்கு சென்று, பழுதான மின்கொக்கியை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
நீண்டநேரம் மின்கொக்கி பழுதாகி, நடுவழியில் இருட்டில் நின்றிருந்த ரயிலில் பயணித்தவர்கள், அதிலிருந்து குதித்து, அனுப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றடைந்தனர். அங்கிருந்து, ஆட்டோ, வேன் உள்ளிட்டவைகளை பிடித்து வீடுகளுக்கு சென்றனர்.
நள்ளிரவு, 12:45 மணிக்கு பழுதான மின்கொக்கி சரி செய்யப்பட்டு, புறநகர் புறப்பட்டது.
அதை தொடர்ந்து, மற்ற ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்தன. இந்த சம்பவத்தால், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நள்ளிரவில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்து, பயணியர் பெரும் தவிப்பிற்கு ஆளாகினர்.

