/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் நிலைய கூரை இன்றி வெயிலில் தவிக்கும் பயணியர்
/
பஸ் நிலைய கூரை இன்றி வெயிலில் தவிக்கும் பயணியர்
ADDED : ஏப் 29, 2025 11:35 PM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தின் மீது அமைக்கப்பட்ட நிழற்குடையின் இரும்பு துாண்கள் சாய்ந்து இருந்ததால், 2021ம் ஆண்டு நிழற்குடை முழுதும் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக, புதிய நிழற்குடை அமைக்கப்படும் என, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அப்போதே திட்டம் மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்ட நிலையில், பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம், நீர்நிலை தொடர்பான இடம் என்பதால் திட்டம் நிராகரிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தின் மீது கூரை அமைக்க முடியாத நிலை தொடர்கிறது. இதனால், தற்போது கொளுத்தும் வெயிலில், பயணியர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பேருந்து பயணியரின் நலன் கருதி, உடனடியாக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் கூரை அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

