/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம்: நகராட்சி நடவடிக்கை திருத்தணி நகராட்சி நடவடிக்கை
/
வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம்: நகராட்சி நடவடிக்கை திருத்தணி நகராட்சி நடவடிக்கை
வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம்: நகராட்சி நடவடிக்கை திருத்தணி நகராட்சி நடவடிக்கை
வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம்: நகராட்சி நடவடிக்கை திருத்தணி நகராட்சி நடவடிக்கை
ADDED : அக் 08, 2024 01:01 AM
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் முதல் தவணை சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு அபராத தொகை செலுத்த வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், திருநின்றவூர், திருவேற்காடு, பொன்னேரி ஆகிய ஐந்து நகராட்சிகள் உள்ளன.
எட்டு பேரூராட்சிகள்
அதே போல், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருமழிசை, கும்மிடிப்பூண்டி, நாரவாரிகுப்பம், ஆரணி, மீஞ்சூர் ஆகிய எட்டு பேரூராட்சிகள் உள்ளன.
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆண்டுக்கு இரு தவணையாக வசூலிக்கப்படுகிறது.
அதாவது முதல் தவணை ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையும், இரண்டாவது தவணை அக்டோபர் மாதம் முதல், மார்ச் மாதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது.
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கு ஆன்-லைன் மூலம் கட்டுவதற்கும் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதவிர, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளன.
இதுதவிர நகராட்சி, பேரூராட்சி வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துமாறு நேரில் சென்று அறிவுறுத்தியும், வாகனங்கள் மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.
ஆனாலும் பெரும்பாலானோர் வரி செலுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றனர்.
சொத்துவரி, குடிநீர் கட்டணம் முதல் மற்றும் இரண்டாம் தவணை உரிய காலத்திற்குள் கட்டினால் அபராதம் இல்லாமல் வரி செலுத்தலாம்.
அபராதம் வசூலிப்பு
தவறும்பட்சத்தில் அபராதத்துடன் சொத்துவரி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதாவது முதல் தவணை செப்டம்பர் வரை செலுத்தியவர்களுக்கு அபராதம் இல்லை.
இம்மாதம் முதல், மார்ச் மாதம் வரை முதல் தவணை செலுத்து வோர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1 சதவீதம் அபராதம் வீதம், 6 சதவீதம் வரை அபராதத் தொகையுடன் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும்.
தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மூன்று முறை நோட்டீஸ் வழங்கி, பின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
இதுதவிர, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இது குறித்து நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துமாறு ஒவ்வொரு ஆண்டும் மக்கள் இடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், முதல் தவணை ஏப்ரல், 30ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்குகிறோம்.
அதே போல், இரண்டாம் தவணை, அக்.,31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கும் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறோம்.
தவறும்பட்சத்தில் அபராதத்துடன் வரி வசூலிக்கப்படும் என, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வரி செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.