/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விசைத்தறி நெசவாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
விசைத்தறி நெசவாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 22, 2024 11:11 PM

திருத்தணி, திருத்தணி வருவாய் கோட்டத்தில் மத்துார், புச்சிரெட்டிப்பள்ளி, பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரி பேட்டை, வங்கனுார் மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள், விசைத்தறியின் மூலம் லுங்கி, வேட்டி போன்ற துணிகள் தயாரித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால் கடந்த பத்து நாட்களாக விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம், திருத்தணி கோட்டாட்சியர் தீபா தலைமையில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கம்பெனி உரிமையாளர்கள் இடையே சமரச பேச்சு நடத்தினர்.
ஆனால் பேச்சு தோல்வியில் முடிந்ததால், வரும், 22ம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என கோட்டாட்சியர் தீபா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று காலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோட்டாட்சியர் தீபா தலைமையில் விசைத்தறி நெசவாளர், கம்பெனி உரிமையாளர்கள் இடையே பேச்சு துவங்கியது.
மதியம், 2:45 மணி வரை தொடர்ந்து இரு தரப்பினரும் இடையே கூலி உயர்வு குறித்து பல கட்டடங்கள் பேச்சு நடத்தியும் தோல்வியில் முடிந்ததால் கோட்டாட்சியர் தீபா கூட்டத்தை ஒத்தி வைத்து, பின் தேதி அறிவித்து மீண்டும் பேச்சு நடத்தப்படும் என அறிவித்தார்.
இதனால், 200 பெண்கள் உட்பட, 600க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மாலை, 6:00 மணிக்கு விசைத்தறி நெசவாளர்கள், அங்கிருந்து புறப்பட்டு வீடுகளுக்கு சென்றனர். அப்போது இன்று பொதட்டூர்பேட்டையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக நெசவாளர்கள் தெரிவித்தனர். சமரச பேச்சு கூட்டத்தில் திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ், திருவள்ளூர் தொழிலாளர் நல வாரிய துணை ஆணையர் எட்வின், கைத்தறி உதவி இயக்குனர் இளங்கோவன், கைத்தறி அலுவலர் சுரேஷ், தாசில்தார்கள் மதன், ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
l திருத்தணி தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் திருத்தணி கிளை சார்பில், பத்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், 30க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் பங்கேற்று பத்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.