/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆண்டார்மடம் தரைப்பாலம் மூழ்கும் அபாயம் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் விரக்தி
/
ஆண்டார்மடம் தரைப்பாலம் மூழ்கும் அபாயம் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் விரக்தி
ஆண்டார்மடம் தரைப்பாலம் மூழ்கும் அபாயம் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் விரக்தி
ஆண்டார்மடம் தரைப்பாலம் மூழ்கும் அபாயம் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் விரக்தி
ADDED : அக் 19, 2025 10:12 PM

பொன்னேரி: ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, ஆண்டார்மடம் தரைப்பாலம் மூழ்கும் நிலையில், தற்காலிக நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாததால், கிராம மக்கள் விரக்தி அடைந்து உள்ளனர்.
பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தின் வழியாக ஆரணி ஆறு பயணிக்கிறது.
இதே பகுதியில் காட்டூர் - பழவேற்காடு சாலையும், ஆற்றின் குறுக்கே தரைப்பாலமும் அமைந்து உள்ளது.
இந்த தரைப்பாலம், 2023ல் சேதமடைந்து, தற்காலிகமாக சிமென்ட் உருளைகள் பதித்து பாதை அமைக்கப்பட்டது.
மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, சிமென்ட் உருளைகள் அடித்து செல்லப்படுகின்றன.
இதனால், ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு, கடப்பாக்கம், அபிராமபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், 10 - 15 கி.மீ., சுற்றிக் கொண்டு பயணிக்கும் நிலை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்கிறது. தற்போது, ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தற்காலிக தரைப்பாலம் மூழ்கும் நிலை உள்ளது.
வழக்கமாக, சிமென்ட் உருளைகள், மணல் மூட்டைகள் போடப்பட்டு, தரைப்பாலம் ஆற்று நீரில் அடித்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கிராம மக்கள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏ.என்.குப்பம் அணைக்கட்டு ஆரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள கவரைப்பேட்டை அருகே, ஏ.என்.குப்பம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு, இரு நாட்களுக்கு முன் நிரம்பியது.
அணைக்கட்டில் இருந்து, நீர்ப்பாசன ஏரிகளுக்கான கால்வாயில், 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், அணைக்கட்டின் கீழ் உள்ள, 20 நீர்ப்பாசன ஏரிகளுக்கு தண்ணீர் சென்றுக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வினாடிக்கு, 670 கன அடி நீர் நிரம்பி வழிகிறது. அணைக்கட்டு மற்றும் கரையோர பகுதிகளை, நீர்வள ஆதார துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணைக்கட்டு பகுதியில், 2,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.