குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 08, 2026 10:50 PM

திருத்தணி: 'திருத்தணி ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதுடன், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவேன்' என, தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.
திருத்தணி சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவர் நேற்று, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, ஒன்றிய செயலர் ஆரத்தி ரவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், திருத்தணி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள வேலஞ்சேரி, சத்திரஞ்ஜெயபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பிரசாரம் செய்தார்.
ஒவ்வொரு ஊராட்சி நுழைவாயிலிலும் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி ஆகியோருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின், வீதி வீதியாக சென்று முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
அப்போது, கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், திருத்தணி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளார். அதேபோல், நானும் வெற்றி பெற்றால், சில ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்.
மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றுவேன். அனைத்து கிராமங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை உயர்த்தி, போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
