குப்பையால் சீரழியும் குளம்: ஊராட்சி நிர்வாகம் 'சைலன்ட்'
குப்பையால் சீரழியும் குளம்: ஊராட்சி நிர்வாகம் 'சைலன்ட்'
ADDED : ஜன 26, 2026 06:03 AM

பள்ளிப்பட்டு: காக்களூரில் உள்ள குளத்தில் குப்பை கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் மாசடைந்து வருவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதை, ஊராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் காக்களூர் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் எதிரே குளம் அமைந்துள்ளது. இக்குளத்திற்கு கொத்தகுப்பம், ராமாபுரம் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. இதனால், ஆண்டு முழுதும் குளம் நிரம்பியே காணப்படுகிறது.
சில மாதங்களாக இக்குளத்தில் சிலர் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இதனால், தண்ணீர் மாசடைந்து வருகிறது. இந்த குப்பையில் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகளவில் உள்ளதால், தண்ணீர் நிலத்தடிக்கு செல்வது தடுக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனால், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதை தடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, குளத்தை சீரமைத்து, குப்பை கழிவுகளை கொட்டுவோர் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
