/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காணும் பொங்கல் கொண்டாட்டம் பழவேற்காடில் குவிந்த பயணியர்
/
காணும் பொங்கல் கொண்டாட்டம் பழவேற்காடில் குவிந்த பயணியர்
காணும் பொங்கல் கொண்டாட்டம் பழவேற்காடில் குவிந்த பயணியர்
காணும் பொங்கல் கொண்டாட்டம் பழவேற்காடில் குவிந்த பயணியர்
ADDED : ஜன 17, 2024 10:06 PM

பழவேற்காடு:வங்காள விரிகுடா கடல்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பழவேற்காடு மீனவ பகுதி, சிறந்த சுற்றுலாத்தளமாக அமைந்துள்ளது. புத்தாண்டு, காணும் பொங்கல் நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் குவிவர்.
சென்னை மெரினா போல், அழகிய கடற்கரை அமைந்துள்ளதால், குடும்பத்தினருடன் இங்கு வந்து பொழுதை கழிப்பர்.
நேற்று காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் பழவேற்காடில் குவிந்தனர்.
கடற்கரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து கடல் அழகை ரசித்தும், கடல் அலைகளில் விளையாடியும் மகிழ்ந்தனர்.மேலும், கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், போலீசார் அவர்களை கண்காணித்தபடி இருந்தனர்.'டவர்' அமைத்து ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கியபடி இருந்தனர். பொன்னேரி தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு உபகரணங்களுடன் கடற்கரை பகுதி வலம் வந்தனர்.
பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டது.
காணும் பொங்கல் நாளில் சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் பாதுகாப்பு கருதி, மீனவர்களும் தொழிலுக்கு செல்வதை தவிர்த்தனர்.
நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பழவேற்காடு பஜார் பகுதியாக சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் பழவேற்காடு நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, போலீசார் மாற்று வழித்தடங்களில் வாகனங்களை திருப்பி அனுப்பி போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.