/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொங்கல் பண்டிகை நெசவு பணிகள் தீவிரம்
/
பொங்கல் பண்டிகை நெசவு பணிகள் தீவிரம்
ADDED : டிச 24, 2024 11:18 PM
ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி ஒன்றியங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், 50,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். வங்கனுார் கிராமத்தில் கைகுட்டை மற்றும் மேல்துண்டு நெசவு செய்யப்படுகிறது. பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், மத்துார், புச்சிரெட்டிபள்ளி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்டி, லுங்கி, சேலை உள்ளிட்ட ரகங்கள் நெசவு செய்யப்படுகின்றன.
இது தவிர, ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் இருந்து, சுடிதார் ரகங்களுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, சுடிதார் ரகங்களும் நெசவு செய்யப்படுகின்றன.
விசைத்தறி நெசவில், துணி நெசவு பணிகளுடன் அது சார்ந்த பாவு தயாரித்தல், பசை சேர்த்தல், நுால் சுற்றுதல் உள்ளிட்ட வேலைகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
நெசவு தொழிலில், தை மாதம் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, தொழில் ஆண்டு புது கணக்குடன் துவங்கும். போகி பண்டிகையுடன் நடப்பு தொழில் ஆண்டு நிறைவு பெறுகிறது.
வரும் போகி பண்டிகை வரை நெசவு முழுவீச்சில் நடைபெறும். அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு பின், நல்ல நாள் பார்த்து மீண்டும் நெசவு துவங்கும்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தேவையான பொருள் ஈட்டும் விதமாக நெசவாளர்கள் தற்போது முழுவீச்சில் நெசவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக தறிக்கூடங்களில் வேலை செய்து வருகின்றனர்.

