/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி - வஞ்சிவாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை
/
பொன்னேரி - வஞ்சிவாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : மார் 01, 2024 07:48 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த தேவராஞ்சேரி, மடிமைகண்டிகை, ஆசானபூதுார், வஞ்சிவாக்கம் உள்ளிட்ட, 10 கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகள் அத்யாவசிய தேவைகளுக்கு, 8 - 10கி.மீ., தொலைவில் உள்ள பொன்னேரிக்கு வந்து செல்ல பேருந்து வசதி இல்லாததால், பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
இவர்கள் இருசக்கர வாகனங்களை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இருசக்கர வாகனங்கள் இல்லாதவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க பொன்னேரியில் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு வந்து செல்வதற்கு மிதிவண்டிகளை பயன்படுத்துகின்றனர்.
ஒரு சில மாணவர்கள், 3கி.மீ., நடந்து சென்று, பொன்னேரி - பழவேற்காடு வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணிக்கின்றனர். பொன்னேரியில் இருந்து மேற்கண்ட கிராமங்கள் வழியாக வஞ்சிவாக்கம் வரை அரசு பேருந்து இயக்க வேண்டும் என, கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் மனு அளித்தும் நடவடிக்கை இன்றி கிடப்பதால், கிராமவாசிகள் விரக்தி அடைந்து உள்ளனர். போக்குவரத்து நிர்வாகம் மேற்கண்ட வழித்தடத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

