/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரைகுறை பணியுடன் திறக்கப்பட்ட குளம் பூந்தமல்லியில் ரூ.72 லட்சம் நிதி வீணடிப்பு
/
அரைகுறை பணியுடன் திறக்கப்பட்ட குளம் பூந்தமல்லியில் ரூ.72 லட்சம் நிதி வீணடிப்பு
அரைகுறை பணியுடன் திறக்கப்பட்ட குளம் பூந்தமல்லியில் ரூ.72 லட்சம் நிதி வீணடிப்பு
அரைகுறை பணியுடன் திறக்கப்பட்ட குளம் பூந்தமல்லியில் ரூ.72 லட்சம் நிதி வீணடிப்பு
ADDED : ஜன 27, 2025 02:35 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சி குமணன்சாவடியின் நீர் ஆதாரமான குளம், 0.85 ஏக்கரில் இருந்து, காலப்போக்கில் ஆக்கிரமிப்பில் சிக்கி, 0.50 ஏக்கர் பரப்பாக குறைந்து விட்டது. வணிக கட்டடங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.
இந்த குளத்தின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல், பூந்தமல்லி நகராட்சி, பொது நிதியில், 23 லட்சம் ரூபாய், 15வது நிதிக்குழும நிதி, 49 லட்சம் என, 72 லட்சம் ரூபாயில் இந்த குளம் சீரமைப்பு பணிகள், 2023ல் துவங்கின.
குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, நடைபாதை, மின் விளக்கு, இருக்கைகள், பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.
குளத்தின் மூன்று பக்கம் நடைபாதை அமைத்த நிலையில், பணிகள் நிறைவடையாத நிலையில், கடந்தாண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், அவசரமாக திறக்கப்பட்டது. பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்தபின். மீதமுள்ள பணிகள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து, 10 மாதங்களுக்கு மேலாகியும், குளத்தின் சீரமைப்பு பணிகள் இன்னும் துவங்கவில்லை.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
குளத்தின் சீரமைப்பு பணி பாதி கூட முடியவில்லை. குளத்தின் ஒரு பகுதியில் நடைபாதை போடப்படவில்லை. இதனால், குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சிக்கு கூட செல்ல முடியவில்லை.
செடி, கொடிகள் வளர்ந்து, குளக்கரை வீணாகி வருகிறது. இதனால், குளத்தின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட, 72 லட்சம் ரூபாய், அரசு நிதி வீணடிக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம், குளத்தை சுற்றிய ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அரைகுறையாக விட்ட பணிகளை விரைந்து முடித்து, குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

