தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவு நீர் சேமிக்க ஆயத்தம்: கரைகளின் உறுதித்தன்மையை கணிக்க முடிவு 5 இடங்களில் மண் பரிசோதனை பணி தொடக்கம்

சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவு நீர் சேமிக்க ஆயத்தம்: கரைகளின் உறுதித்தன்மையை கணிக்க முடிவு 5 இடங்களில் மண் பரிசோதனை பணி தொடக்கம்

சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவு நீர் சேமிக்க ஆயத்தம்: கரைகளின் உறுதித்தன்மையை கணிக்க முடிவு 5 இடங்களில் மண் பரிசோதனை பணி தொடக்கம்


UPDATED : ஆக 26, 2026 08:34 PM

ADDED : ஆக 26, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 08:34 PM ADDED : ஆக 26, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவரம் : சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரியில், மூன்று ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு முழு கொள்ளளவு தண்ணீர் சேமித்து வைக்க, நீர்வளத்துறை ஆயத்தமாகி வருகிறது. அதற்காக ஏரிக்கரைகளின் உறுதித்தன்மையை கணிக்க, ஐந்து இடங்களில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. வடகிழக்கு பருவமழையின்போது, இந்த ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, தேவையின்போது, பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2023ல், வடகிழக்கு பருவமழையின்போது, ஏரியின் கரைகள் சேதம் அடைந்தது. மேலும், கரைகள் அடிக்கடி சேதம் அடைந்து, மண் சரிவு ஏற்படுவதை தொடர்ந்து, மத்திய - மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நீரியல் வல்லுனர்களின் ஆய்வு பரிந்துரையின்படி, சோழவரம் ஏரியின் கரை சீரமைப்பு பணிகளுக்கு, கடந்த 2024ல் தமிழக அரசு, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

மொத்தம், 3.5 கி.மீ., நீளம் கொண்ட ஏரியின் கரையில், அதிக பாதிப்புள்ள, 1.04 கி.மீ., தொலைவிற்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கரையில், 6 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் சுவரும், அதிலிருந்து 30 மீட்டர் சரிவில், பாறை கற்களும் பதிக்கப்பட்டன.

கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டு, கரை பலவீனம் அடைவதை தடுக்க, நவீன தொழில்நுட்பமான 'டி - வால்' எனப்படும் நீர் கசிவு தடுப்பு சுவரும், கரையின் மேல்பகுதியில், ஒரு மீட்டர் உயரத்தில் அலை தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டன.

ஏரியின் கரைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இரண்டு ஆண்டுகள் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல், 30 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

கடந்த ஆண்டு, செப்., மாதம் பணிகள் நிறைவு பெற்றதால், முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க நீர்வளத்துறை திட்டமிட்டது.

வடகிழக்கு பருவமழையும் கைகொடுத்ததால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதே சமயம், ஏரியின் நீர்மட்டம், 0.79 டி.எம்.சி.,யாக உயர்ந்தபோது, புதிதாக சீரமைக்கப்பட்ட கரைகளில் விரிசல்கள் ஏற்பட்டன.

ஆங்காங்கே கரைகள் உள்வாங்கியும், கான்கிரீட் கட்டுமானங்கள் சிதைந்தும் போனது. அதையடுத்து, ஏரியில் இருந்த தண்ணீர், கொசஸ்தலை ஆற்றிற்கு திறந்துவிடப்பட்டு, ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, ஏரியில், 0.55 டி.எம்.சி., மட்டுமே தேக்கி வைக்கப்பட்டது. அதன்பின், சேதமான பகுதிகளில் கரைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டன,

தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரும், இந்த ஆண்டு கோடையின்போது, குடிநீர் தேவைக்காக படிப்படியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ஏரியில், 0.11 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது.

இந்நிலையில், கரை சீரமைப்பு பணிகளை முழுமையாக ஆய்விற்கு உட்படுத்தி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது, முழு கொள்ளளவு தண்ணீர் சேமித்து வைக்க, நீர்வளத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக, ஏரியின் வெளிக்கரையின் கீழ் பகுதியில், ஐந்து இடங்களில் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளில், தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதற்காக, ஆழ்துளை கிணறுகள் அமைத்து, ஒவ்வொரு மீட்டரிலும் மண் சேகரித்து, சோதனைக்கு உட்படுத்த உள்ளனர். 24 மீட்டர் ஆழம் வரை மண் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான பணிகள், தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆய்வு பணிகள் முடிந்து, இந்த ஆண்டாவது சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சேதம் அடைந்த பகுதிகளில், கரையின் அகலத்தை, 5ல் இருந்து, 10 மீட்டராக விரிவுபடுத்தி சீரமைத்துள்ளோம். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ள நிலையில், கரையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வின் முடிவுகளுக்கு ஏற்ப, ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us