/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் சேதம்
/
வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் சேதம்
ADDED : பிப் 05, 2025 09:42 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சி, எம்.ஜி.ஆர்., நகர் பெரியபாளையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகேசன்,40. வெல்டர். இவர், தளம் போட்ட வீட்டில், மனைவி ராமி, பத்தாம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை, வழக்கம் போல முருகேசன் வேலை சென்றார். மாலை 5:00 மணிக்கு ராமி, வீட்டை பூட்டிக் கொண்டு, மகளை அழைத்து வருவதற்காக ஜெ.ஜெ.நகரில் உள்ள சி.எஸ்.ஐ., பள்ளிக்கு சென்றார்.
மாலை 5:20 மணிக்கு திடீரென மர்மமான முறையில் முருகேசன் வீட்டில் தீப்பிடித்து, புகை ஜன்னல் வழியாக வந்தது. இதை பார்த்ததும் அருகில் வசிப்பவர்கள் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தும், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி வீட்டில் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்து துணிமணிகள், பல்வேறு சான்றுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகின.
திருத்தணி வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, முதற்கட்ட உதவிகள் செய்து கொடுத்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் எவ்வாறு தீப்பிடித்தது என விசாரித்து வருகின்றனர். வீட்டில் காஸ் சிலிண்டர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.