தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 13 ஆண்டுகளாக பணிமனை அமைக்கும் திட்டம்... இழுத்தடிப்பு : அரசு மாறினாலும் நிதி ஒதுக்கீடில் தொடரும் தாமதம்;

13 ஆண்டுகளாக பணிமனை அமைக்கும் திட்டம்... இழுத்தடிப்பு : அரசு மாறினாலும் நிதி ஒதுக்கீடில் தொடரும் தாமதம்;

13 ஆண்டுகளாக பணிமனை அமைக்கும் திட்டம்... இழுத்தடிப்பு : அரசு மாறினாலும் நிதி ஒதுக்கீடில் தொடரும் தாமதம்;


UPDATED : செப் 26, 2026 05:16 AM

ADDED : செப் 25, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 05:16 AM ADDED : செப் 25, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூரில் மாவட்டத்தில், மாநகர பேருந்து பணிமனை அமைக்கும் திட்டம், 13 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., தற்போது த.வெ.க., என, அரசுகள் மாறினாலும், நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், திருவள்ளூரில் இருந்து, அதிகாலையில் சென்னைக்கு பணிக்கு செல்வோர், மாணவ - மாணவியர் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பணிமனைகளில் இருந்து, சுற்றியுள்ள கிராமங்களுக்கு, நகர பேருந்துகளும், விரைவு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்தில் இருந்து பலரும், வேலை, மருத்துவம், பள்ளி, கல்லுாரி மற்றும் அத்தியாவசிய தேவைக்காக, சென்னைக்கு சென்று வருகின்றனர்.

போதுமான பேருந்து வசதி இல்லாததால், பல பேருந்துகள் மாறி சென்ற நிலையில், கடந்த 2009ம் ஆண்டில் இருந்து, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இங்கிருந்து, வடபழனி - தடம் எண்: 501, பெரியபாளையம் - 505ஏ, தாம்பரம் - 566ஏ, ஆவடி - 572 கட் சர்வீஸ், அம்பத்துார் எஸ்டேட் - 572, பிராட்வே - 571, தி.நகர் - 597, கோயம்பேடு - 596ஏ, ஸ்ரீபெரும்புதுார் - 583ஏ, செங்குன்றம் - 505 ஆகிய ஊர்களுக்கு, 54 பேருந்துகள் மூலம், 536 நடைகள் இயக்கப்பட்டு வந்தன.

மேலும், பழவேற்காடு, பொன்னேரி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராமளான மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், பேருந்துகளை பராமரிப்பதற்காகவும், இரவில் தங்கி அதிகாலை பேருந்துகளை இயக்கவும், மாநகர போக்குவரத்து கழக பணிமனை, மாவட்டத்தின் தலைநகரமான திருவள்ளூரில் இல்லை.

தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி, அம்பத்துார் தொழிற்பேட்டை, ஆவடி, கே.கே.நகர், பாடியநல்லுார் பகுதிகளில் இருந்து தான் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகள் அனைத்தும், இரவு 8:00 மணியுடன், அந்தந்த பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல், காலையில் 5:30 மணியளவில், பணிமனைகளில் இருந்து புறப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பயணியரை ஏற்றிச் செல்கின்றன.

இதனால், தேவையில்லாமல் டீசல் செலவாவதுடன், பணிமனை இல்லாததால், பழுதடையும் பேருந்துகளை உடனடியாக சரி செய்ய முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு பணிமனை அமைக்க, திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில், தாமரைப்பாக்கம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில், 5.5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்தது.

இடம் ஒதுக்கீடு செய்து 13 ஆண்டுகளாகியும், இதுவரை அங்கு மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை கட்டும் பணி தொடங்காமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஸ்ரீதர் கூறியதாவது:

சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை இணைக்கும் வகையில், மாநகர பேருந்து சேவை, கடந்த 2009ல் தொடங்கப்பட்டது.

இந்த வகையில், திருவள்ளூரில் இருந்து பிராட்வே, தாம்பரம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட மாநகர பேருந்து சேவை, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால், கொரோனா காலத்திற்கு பின், மாநகர பேருந்து சேவை படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது, குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு காரணம், திருவள்ளூரில் மாநகர பேருந்து பணிமனை இல்லாததே. மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் இருந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மாநகர பேருந்துகளும், காலை 6:30 மணிக்கு மேல் தான் இயக்கப்படுகின்றன.

மேலும், பழவேற்காடு, பொன்னேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு, முதல் மாநகர பேருந்து, காலை 8:30 மணிக்கு மேல் வருவதால், மாணவ - மாணவியர், பணிக்கு செல்வோர், குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே, அம்மணம்பாக்கம் கிராமத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில், உடனடியாக பணிமனை அமைக்க, மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டம், அம்மணம்பாக்கம் கிராமத்தில், 5.5 ஏக்கர் நிலம், மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

போதிய நிதி இல்லாததால், பணிமனை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இந்நிலையில், அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஆனால், தமிழக அரசு இதுவரை நிதி ஒதுக்காததால், பணிமனை அமைக்கப்படவில்லை. அரசு நிதி ஒதுக்கீடு செய்தால், பணிமனை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us