ADDED : ஜூலை 31, 2025 01:14 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலை வழியே கனரக லாரி மற்றும் சவுடு மணல் லாரிகள் செல்வதால் சாலை சேதமடைந்து வருவதாக கூறி, பகுதி மக்கள் லாரிகளை மறித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியில் நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து, மோசமான நிலையில் இருந்தது.
இதையடுத்து இங்கு இருந்து, அரண்வாயல் செல்லும் சாலை, 3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இன்னும் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வராத நிலையில், அரசு குவாரியிலிருந்து சவுடு மணல் ஏற்றி வரும் லாரி உட்பட கனரக வாகனங்கள் என, தினமும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன.
இதனால், புதியதாக அமைக்கப்படும் இந்த சாலை சேதமடைந்து வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று நெடுஞ் சாலையில் வந்த லாரிகளை மறித்து இவ்வழியே வரக்கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர்.
பின் அப்பகுதி வழியாக வந்த கனரக லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களையும் இனிமேல் இவ்வழியே வரக்கூடாது என எச்சரித்து திருப்பி விட்டனர்.
