ADDED : ஜூலை 05, 2025 11:27 PM

பள்ளிப்பட்டு,:நகரி -- திண்டிவனம் ரயில் பாதை பணி, பாண்டரவேடு பகுதியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம், நகரியில் இருந்து திண்டிவனம் வரையிலான ரயில் பாதை திட்டம், 18 ஆண்டுகளுக்கு பின் தற்போது முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2007ல் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக, ஆர்.கே.பேட்டை பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், அப்போதே மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதற்கான நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றால் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. நகரியை ஒட்டியுள்ள தமிழக கிராமமான பாண்டரவேடு பகுதியில், மண் கொட்டி சமன் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
பாண்டரவேடு ஏரி வழியாக அமைக்கப்படும் ரயில் பாதையில் பாலம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இதற்கு, 'பாலம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.