/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை பணி மந்தம்
/
மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை பணி மந்தம்
ADDED : ஜன 07, 2024 01:29 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் காட்டூர், நெய்தவாயல், வாயலுார், புதுகுப்பம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள கிராமவாசிகள், அத்யாவசிய தேவைகளுக்கு, மேற்கண்ட ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் உள்ள மீஞ்சூர் பஜார் பகுதி சென்று வருகின்றனர்.
இவர்கள் பேருந்து, ஷேர் ஆட்டோவில் அரியன்வாயல் பகுதிக்கு வந்து அங்கிருந்து, மீஞ்சூர் பஜார் பகுதிக்கு செல்ல, ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடக்கின்றனர்.
சில நேரங்களில் சிக்னலுக்காக காத்திருக்கும் சரக்கு ரயில்களின் அடியில் புகுந்து செல்கின்றனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் தண்டவாளங்களை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இவர்கள் மாற்று வழித்தடத்தில் செல்ல வேண்டுமானால், காட்டூர் சாலை வழியாக பயணித்து, 2 கி.மீ., சுற்றி மீஞ்சூர் பஜார் பகுதிக்கு வரவேண்டும்.
கிராமவாசிகளின் தொடர் கோரிக்கையின் பயனாக சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான கான்கிரீட் கட்டுமானங்கள் தயார் செய்யப்பட்டன.
2020ல் தயார் செய்யப்பட்ட நிலையில் மேற்கொண்டு பணிகள் ஏதும் நடைபெறாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
கான்கீரிட் கட்டுமானங்கள் ரயில் நிலையத்தின் அருகே பயனின்றி கிடக்கிறது. கிராமவாசிகள் ரயில்வே தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடந்து செல்வதும் தொடர்கிறது.
மேற்கண்ட ரயில் நிலையத்தின் அருகே, கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.