ADDED : நவ 26, 2024 09:02 PM
ஊத்துக்கோட்டை:வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று திருவள்ளூர் மாவட்டம் முழுதும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மேக மூட்டமாக காணப்பட்டது.
சில இடங்களில் மழை பெய்தது. மாலை, 3:00 மணிக்கு ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், அனந்தேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யத் துவங்கியது.
நேற்று காலை முதல் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வானம் மேகமூடத்துடன் காணப்பட்டது. காலை, 10:00 மணி முதல் தொடர்ந்து துாறல் மழை பெய்தது.
கிராமங்களில் விவசாய பணிகள் மற்றும் அன்றாட பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் பழவேற்காடு பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்தது.