/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து துர்நாற்றம்
/
கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து துர்நாற்றம்
கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து துர்நாற்றம்
கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து துர்நாற்றம்
ADDED : டிச 05, 2025 05:23 AM

திருவள்ளூர்:சுத்தமான மழைநீர் ஓடும் கூவம் ஆற்றில், நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கேசாவரம் அணைக்கட்டு பகுதியில், கூவம் ஆறு உருவாகிறது. இந்த ஆறு, பேரம்பாக்கம், கடம்பத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல், திருவேற்காடு வழியாக, 72 கி.மீ., ஓடி, சென்னையில், நேப்பியர் பாலம் அருகே, வங்கக் கடலில் கலக்கிறது. கூவம் ஆற்றில் மழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் நீர் காரணமாக, ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
மழை காலத்தில் தண்ணீரை சேகரிக்க கூவம் ஆற்றில், கடந்த, 2016ம் ஆண்டு, 5.89 கோடி ரூபாய் மதிப்பில் புட்லுார் அருகில் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணையில் ஆண்டுதோறும் பருவமழையின்போது கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், புட்லுார், வெங்கத்துார், ஒண்டிக்குப்பம், மணவாளநகர் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மணவாளநகர், ஒண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் உணவகம், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கூவம் ஆற்றில் நேரடியாக விடப்படுகிறது.
மேலும், திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்காமல், நேரடியாக புட்லுார் ஆறு வழியாக, கூவம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதனால், கூவம் ஆற்று தடுப்பணையில் கழிவுநீர் கலந்த நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால், கூவம் ஆற்றில் மழைநீர் கரை புரண்டு ஓடுகிறது. அந்த நீருடன், நகராட்சி கழிவுநீரும் கலப்பதால், நீரின் நிறம் மாறி காட்சியளிக்கிறது. மேலும், புட்லுார், ஒண்டிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது.
எனவே, கழிவுநீரை சுத்திகரித்து, குழாய் வாயிலாக புட்லுார் ஏரியில் விட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

