/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் ராம நவமி விழா கோலாகலம்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் ராம நவமி விழா கோலாகலம்
ADDED : ஏப் 06, 2025 11:39 PM

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் பிரசன்ன ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ராம நவமியை முன்னிட்டு, நேற்று காலை சீதா, ராம, லட்சுமண அனுமந்த் சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. மாலை, சுவாமிகள் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் கருமாரியம்மன் கோவில் வளாகத்தில், பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
ஆர்.கே.பேட்டை
ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு சாலையில் உள்ள அனுமன் கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு சீதாராமர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு தாலிசரடு பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதேபோல், ராசபாளையம், பாலகுருநாதீஸ்வரர் கோவிலிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருத்தணி
திருத்தணி நகரம் அனுமந்தாபுரம் பகுதியில் கல்யாண ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
இன்று இரண்டாம் நாள் பூஜையும், நாளை நண்பகல், 11:00 மணிக்கு உற்சவர் ராமர், சீதா தேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு உற்சவர் வீதியுலாவும் நடக்கிறது. இவ்விழா, 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதேபோல், நல்லாட்டூர் கிராமத்தில் உள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து உற்சவர் ராமர், சீதா தேவிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
கடம்பத்துார்
கடம்பத்துார் ஒன்றியம் செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ராமன் கோவில் ஊராட்சியில் அமைந்துள்ளது, சீதா லட்சுமண ஹனுமத் சமேத தாசரதி கல்யாண ராமர் கோவில். இக்கோவிலில், நேற்று காலை 7:30 கொடியேற்றம் நடந்தது.
மேலும், 10 நாட்கள் நடைபெறும் உத்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சீதா கல்யாணம், 14ம் தேதி மாலை 6:00 - 7:30 மணிக்குள் நடைபெறும். 15ம் தேதி மாலை 6:00 மணிக்கு ராமர் பட்டாபிஷேகமும் 16ம் தேதி விடையாற்றியுடன் ராம நவமி உத்சவம் நிறைவுபெறுமென, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -

