ADDED : டிச 22, 2024 01:17 AM

பொன்னேரி,:பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம் பகுதிகளில் இருந்து, பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, புறநகர் ரயில்களில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்க வட்ட வழங்கல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்க்கர் பிரபு தலைமையில், அத்துறையினர் ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை செல்லும் புறநகர் ரயில்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரயில்களில் பயணியரின் இருக்கைகளுக்கு கீழ் பகுதிகளில் ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு, அவற்றை கைப்பற்றினர்.
மூன்று ரயில்களில் சோதனையிட்டு, 60 மூட்டைகளில் இருந்த, 1,790 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர். அவற்றை பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.