UPDATED : நவ 11, 2026 08:09 PM
ADDED : நவ 11, 2026 08:06 PM

திருவள்ளூர்: பேரத்துார் ஊராட்சியில் உள்ள நுாலகத்தைச் சுற்றிலும் களைச்செடிகள் வளர்ந்துள்ளதால், வாசகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பேரத்துார் ஊராட்சி. இந்த ஊராட்சியில் வசிக்கும் மாணவ – மாணவியர், இளைஞர்கள் படிப்பதற்காக, நுாலகம் செயல்பட்டு வருகிறது.
நுாலகத்திற்கு தினமும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்து அங்குள்ள நுால்களையும், நாளிதழ்களையும் வாசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நுாலக வளாகத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், களைச்செடிகள் வளர்ந்து, புதராக காட்சியளிக்கிறது. இதனால், நுாலகத்திற்கு சென்று வர, வாசகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், நுாலக வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளால், பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. அதனால், மாலை நேரத்தில் நுாலகத்திற்கு செல்வோர், அச்சத்துடன் சென்று திரும்புகின்றனர்.
எனவே, திருவள்ளூர் ஒன்றிய நிர்வாகம், நுாலக வளாகத்தைச் சுற்றிலும் வளர்ந்துள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும் என, பேரத்துார் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
