ADDED : அக் 17, 2025 07:55 PM
பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில், அரிஅரன் பஜார் மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில், நகராட்சிக்கு சொந்தமான 72 கடைகள், குத்தகை அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இதில், அரிஅரன் பஜார் பகுதியில் இருக்கும் வணிக வளாகத்தில் உள்ள, 11 கடைகளின் குத்தகைதாரர்கள் வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
வாடகை கேட்கும்போது குத்தகைதாரர்கள், 'வாடிக்கையாளர்கள் பார்வைக்கு தெரியாமல் கடைகள் பின்புறமாக இருப்பதால், எந்த வணிகமும் செய்ய முடியவில்லை' எனக் கூறி வந்தனர். மேலும், அந்த கடைகளை குத்தகைதாரர்கள் பயன்படுத்தாமலும் இருந்தனர்.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் வாடகை பாக்கி இருப்பதாக கூறி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 11 கடைகளையும் பூட்டி நடவடிக்கை எடுத்தது.இக்கடைகள் நீண்ட காலமாக பூட்டியே கிடப்பதால், வீணாகி வருவதுடன், நகராட்சியின் வருவாயும் பாதிக்கிறது. தற்போது, அவற்றை மறுஏலம் விட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, கடைகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், வாடகை பாக்கி வைத்துள்ள குத்தகைதாரர்களிடம் இருந்து, 13.71 லட்சம் ரூபாய் நிலுவை தொகையை வசூலிக்க, சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.