புதிய பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை
புதிய பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை
ADDED : ஏப் 24, 2026 06:11 PM
திருத்தணி: திருப்பதி - காஞ்சிபுரம் இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி - அரக்கோணம் சாலை, அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 21 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த மாதம் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்திற்குள் சில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வருவது இல்லை.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மட்டும் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் திருப்பதி ஆகிய அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், திருப்பதி, திருத்தணி, அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள், திருத்தணி புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் பேருந்துகளை நிறுத்தி, பயணியரை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே பயணியர் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.
எனவே, பயணியர் நலன்கருதி, காஞ்சிபுரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
