/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாபிராம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை
/
பட்டாபிராம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை
பட்டாபிராம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை
பட்டாபிராம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை
ADDED : டிச 24, 2025 05:55 AM

ஆவடி: பட்டாபிராம் ரயில் நிலையத்தில், மூன்று நடைமேடைகளையும் இணைக்கும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டாபிராம் ரயில் நிலையத்தை, தண்டுரை, சோராஞ்சேரி, வயலாநல்லுார், அன்னம்பேடு, ஆயில்சேரி, அணைகட்டுச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2010ல், பட்டாபிராமில் ரயில்வே உயர்மட்ட பாலம் கட்டப்பட்ட பின், 'எல்.சி., - 10' ரயில்வே கடவு பாதை முழுமையாக மூடப்பட்டது. இதனால், வடக்கு பகுதி மக்கள் பிரதான சாலை செல்ல, பயணச்சீட்டு வாங்க, பட்டாபிராம் சந்தைக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காண, 'எல்.சி., - 10' கடவுப்பாதை அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது, சென்னை - அரக்கோணம் மார்க்கமாக, வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுவதால், கடவுப்பாதை அமைந்துள்ள பகுதிகளில், ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைத்து வருகிறது. குறைந்த மக்கள் தொகை கொண்ட நெமிலிச்சேரி பகுதியில், கடந்த ஆண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
ஆனால், பட்டாபிராம் ரயில் நிலையத்தில் மக்கள் தொகை, பயணியர் எண்ணிக்கை அதிகரித்தும், சுரங்கப்பாதை அமைக்கவில்லை. பல தரப்பினர் கோரிக்கை விடுத்ததால், அக்., மாதம் ரயில்வே நிர்வாகம் பட்டாபிராம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
இந்நிலையில், மூன்று நடைமேடைகளை இணைக்கும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன், 65, கூறியதாவது:
வடக்கு பகுதியான காமராஜர்புரத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதி, சென்னை, திருவள்ளூர் மற்றும் 'சைடிங்' என, மூன்று தண்டவாள இருப்பு பாதை சூழ்ந்த தீவு போல் உள்ளது.
இங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், சி.டி.எச்., மற்றும் தெற்கு பஜார் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுவர். அதேபோல், மேற்கு கோபாலபுரத்தை சேர்ந்த மக்களும் பயனடைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

