ADDED : பிப் 03, 2026 05:24 AM
திருவாலங்காடு: போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்ற வேண்டும் என, சின்னம்மாபேட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், சின்னம்மாபேட்டை ரயில் நிலையம் அருகே, டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இச்சாலையில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். டாஸ்மாக் கடைக்கு வருவோர் சாலையோரம் வாகனங்களை நிறுத்துகின்றனர். மேலும், 'குடி'மகன்கள் பகல் நேரத்திலேயே சாலையில் தள்ளாடி, வாகன ஓட்டுநர்களை மிரள செய்கின்றனர்.
இரவு நேரங்களில், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
