ADDED : பிப் 27, 2024 08:11 PM

பழவேற்காடு:பழவேற்காடு மீனப்பகுதியில், 35 மீனவ கிராமங்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். பைபர் படகுகளில் சென்று மீன்பிடித்து கரை திரும்பும் மீனவர்கள், பழவேற்காடு பாலம் அருகே உள்ள இறங்குதளத்திற்கு அவற்றை கொண்டு வருகின்றனர்.
மீனவர்கள் வசதிக்காக கடந்த, 2015ல், 1.32 கோடி ரூபாய் திட்ட செலவில், 200மீ நீளத்திற்கு ஏரியை ஒட்டி கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வரும், மேற்கண்ட கான்கிரீட் தளமானது தற்போது ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. தளத்தின் மேற்பகுதியில் உள்ள சிமென்ட் பூச்சுக்கள் முழுதும் சிதைந்து, உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் அச்சுறுத்தும் வகையில் வெளியில் தெரிகின்றன.
மீன்களை எடுத்துச் செல்லும்போது, மீனவர்கள் இரும்பு கம்பிகளில் சிக்கி சிறு சிறு காயங்களும் அடைகின்றனர். இறங்குதளம் பகுதியில், மீனவப்பெண்கள் கருவாடு தயாரிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதற்காக, மீன்களை வாங்கி அவற்றை சுத்தப்படுத்தி, இறங்குதளம் பகுதியில் உலரவைத்து பின் விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்த இறங்குதளம் பகுதி சேதமடைந்து கிடப்பதால், அவர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும், அப்பகுதியில் குப்பை கழிவுகள், மீன்கழிவுகள் ஆங்காங்கே கொட்டி குவித்து வைக்கப்பட்டு உள்ளன. மீன் இறங்குதளம் வளாகத்தை பராமரிக்க, அங்குள்ள கடைகள், வியாபாரிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை வாயிலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் மீனவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
சேதமடைந்து உள்ள இறங்குதளம் பகுதியை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
