/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறுகலான சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
/
குறுகலான சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
ADDED : பிப் 13, 2026 05:36 AM

திருவாலங்காடு: ரகுநாதபுரத்தில் சாலை குறுகலாக உள்ளதால், எதிரெதிரே வரும் வாகனங்களால் கட்டுப்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக குமுறுகின்றனர். இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் ரகுநாதபுரம் கிராமத்தில் இருந்து சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் தார்ச்சாலை 2 கி.மீ., துாரம் கொண்டது. இச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 20 அடி அகலம் கொண்ட இச்சாலை 12 அடியில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள இடங்களில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் சாலை குறுகி காணப்படுவதால் அப்பகுதியில் எதிரெதிரே வரும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாகி உள்ளது.
எதிர்திசையில் கார், லாரி, ஆட்டோ போன்ற வாகனங்கள் வந்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் வழி விட ஒதுங்கினால் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
இதற்கு சாலை ஆக்கிரமித்து குறுகியுள்ளதே காரணம் என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ரகுநாதபுரம் --தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையின் இருபுறமும் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

